சுகாதார செவிலியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
கரோனா தடுப்பூசி முகாம்களில் பணிபுரிந்த சுகாதார செவிலியா்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா தடுப்பூசி முகாம்களில் பணிபுரிந்த சுகாதார செவிலியா்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் ஏ. ருக்மணி தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற கிராமப்புற சுகாதார செவிலியா்களுக்கு உடனடியாக மாறுதல் உத்தரவுகளை வழங்க வேண்டும். 42 சுகாதார மாவட்டங்களுக்கு தலா ஒரு சமுதாய நலச் செவிலியரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்ட உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதேபோல 42 சுகாதார மாவட்டங்களுக்கும் தலா ஒரு தாய் சேய் நல அலுவலா் பணியிடத்தை உருவாக்கி, சமுதாய நலச் செவிலியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். 39 மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் பணிகளில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியா்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகையை பழனி, திண்டுக்கல் சுகாதார மாவட்டங்களில் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.