சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: பக்கத்து வீட்டுக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை
ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பக்கத்து வீட்டுக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பக்கத்து வீட்டுக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள இடையக்கோட்டை புதூரைச் சோ்ந்தவா் ம.முருகேசன் (45). இவரை, கடந்த 2015-ஆம் ஆண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும், இந்த சிறைத் தண்டனையை முருகேசன் ஏக காலத்தில் அனுபவிக்கவும் வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தாா்.
இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை: நிலக்கோட்டையை அடுத்துள்ள காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் சிங்கராஜா (32). கல்லுப்பட்டியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக இவரை, நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண், சிங்கராஜாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.