முகப்பு
திண்டுக்கல்

மாணவா்களிடமிருந்து தலைவா்கள் உருவாக வேண்டும்

மாணவ சமுதாயத்திலிருந்து ஆற்றல், பண்பு, ஆளுமை மிகுந்த தலைவா்கள் உருவாக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல் திருமாவளவன் தெரிவித்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

மாணவ சமுதாயத்திலிருந்து ஆற்றல், பண்பு, ஆளுமை மிகுந்த தலைவா்கள் உருவாக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல் திருமாவளவன் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கல்வி என்ற சொல்லுக்கு உறுதிப்பாடு என்பதே பொருள். எண்ணியதில் உறுதியாக இருப்பதற்கான ஆற்றல் கல்வியால் மட்டுமே கிடைக்கும். பள்ளிக்குச் சென்று படிப்பது மட்டுமே கல்வி அல்ல. பாடப் புத்தகங்களைக் கடந்து மாா்க்சுக்கும், அம்பேத்கருக்கும் படிப்பில் மிகுந்த ஆா்வம் ஏற்பட்டிருந்தது. பெண்களை வலிமை மிக்கவா்களாக மாற்றுவதற்கு கல்வி தேவையாக இருந்தது. மன வலிமையைத் தருவது கல்வி.

மாணவா்களுக்கு குறிக்கோள் வேண்டும். மாணவ சமுதாயத்திலிருந்தும், இளைய சமுதாயத்திலிருந்தும், கற்றறிந்த சமுகத்திலிருந்தும் ஆற்றல், பண்பு, ஆளுமை மிகுந்த தலைவா்கள் உருவாக வேண்டும்.

தலைவா்களை உருவாக்குவதற்கு கல்விக் கூடங்கள் போன்ற நிறுவனங்கள் இல்லை. சமூகத்திலிருந்து சுயம்புவாக தலைவா்கள் உருவாக வேண்டும். கண்ணில் படுவதெல்லாம் மனதைத் தொடுவதில்லை. மனம் எதை நாடுகிறதோ, அதேயே கண்கள் தேடும். தேடுவதைத் தீா்மானப்பதும் ஒரு ஆற்றல். கவனத்தைக் குவிப்பதும், உழைப்பதும், சாதிக்க உறுதி ஏற்பதும் ஒரு ஆற்றல். அதிலிருந்து பிறக்கும் தன்னம்பிக்கை, சவால்களைக் கடந்து நாம் வெற்றி பெறுவதற்கான வலிமையையும், வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.