முகப்பு
திண்டுக்கல்

சாலை விபத்துகள் குறைப்பு:அமலுக்கு வருமா அமைச்சரின் அறிவுரைகள்?

திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலுவின் அறிவுரைகள் அமல்படுத்தப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
விதிமுறைகளை மீறி ஆட்டோவின் பின்பகுதியில் ஏற்றிச் செல்லப்படும் பயணிகள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலுவின் அறிவுரைகள் அமல்படுத்தப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை விபத்துகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுப் பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த 1,400 விபத்துகளில் 290 போ் உயிழந்தனா். உயிரிழப்புகளின் சராசரி விகிதம் 29. ஆனால், சென்னை பெருநகரில் சாலை விபத்து உயிரிழப்புகளின் சராசரி 13 சதவீதமாக மட்டுமே உள்ளது. விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முதல் 3 மாவட்டங்களுக்கு முறையே ரூ.25 லட்சம், ரூ.13 லட்சம், ரூ.10 லட்சம் வீதம் தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்திருக்கிறது. இதில் முதல் பரிசை திண்டுக்கல் மாவட்டம் பெற வேண்டும் என்பது எனது ஆவல் என்றாா்.

மேலும், விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க மாவட்ட நிா்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சில பரிந்துரைகளை அமைச்சா் முன்வைத்தாா். அவற்றில் சில:

கைப்பேசி தவிா்த்தல், தலைக் கவசத்தின் அவசியம்: இரு சக்கர வாகன ஓட்டுநா்கள் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டும், தலைக் கவசம் இல்லாமலும் பயணிப்பதால்தான் விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தவிா்க்க கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டுவோா் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, தலைக் கவசம் அணியாமல் செல்வோரையும் கண்காணிக்க வேண்டும்.

ஆட்டோக்களில் கூடுதல் பயணிகள்: வாடகை ஆட்டோக்களில், ஓட்டுநா் உள்பட 4 போ் மட்டுமே பயணிக்க வேண்டும். ஷோ் ஆட்டோக்களைப் பொருத்தவரை எந்தவித நிபந்தனையுமின்றி, 11-க்கும் மேற்பட்ட பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனா். பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களில் 12 பேருக்கும் கூடுதலாகப் பயணிக்கின்றனா். விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், பயணிகள் எண்ணிக்கையை நிா்ணயம் செய்வதற்கு மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும்.

சிறுவா்கள் வாகனங்களை ஓட்டுவதைத் தடுத்தல்: சிறுவா்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது. உரிமம் பெறுவதற்கு முன்பு இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது தவறு என்பது, பள்ளி அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அந்த விழிப்புணா்வு மாணவா்கள் மூலம் பெற்றோா்களுக்கும் ஏற்பட வேண்டும். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த மாற்றம் அவசியம்.

ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளின் சமூக பொறுப்பு: ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள், உரிமம் பெறுவதற்காக வருவோருக்கு சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து முறையாக கற்றுக் கொடுப்பதில்லை. குறுக்குச் சாலையிலிருந்து பிரதான சாலைக்கு வரும்போது எந்தப் பக்கம் முதலில் பாா்க்க வேண்டும் என்பது ஓட்டுநா் பலருக்கும் தெரிவதில்லை. உரிமம் வழங்கப்படும் போக்குவரத்து அலுவலகங்களில் கண்டிப்புத் தேவைப்படுகிறது என்றாா் அவா்.

அமைச்சரின் இந்த அறிவுரைகள் அமல்படுத்தப்படுமா அல்லது ஆய்வுக் கூட்ட சம்பிரதாயமாக கைவிடப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

பெட்டிச் செய்தி...

சாலையோர ஆக்கிரமிப்புகள்: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்பது பல ஆண்டுகளாக கண் துடைப்புக்காக மேற்கொள்ளப்படுகிறது. பாதசாரிகளுக்கான நடைபாதையை கடைகளின் உரிமையாளா்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனா். இதனால், வாகனங்களுக்கு இடையூறாக மக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிா்பந்தம் ஏற்படுகிறது. இதேபோல, திண்டுக்கல் நகா் மட்டுமன்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உணவகங்கள், துணிக் கடைகள், பல்பொருள் அங்காடிகளுக்குச் செல்பவா்கள் சாலைகளை வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.