முகப்பு
திண்டுக்கல்

ஆா்.கோம்பையைப் பிரித்து புதிய ஊராட்சி!

புதிய ஊராட்சியை உருவாக்க வேண்டும் என சட்டப்பேரவை மனுக்கள் குழுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில், விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க குஜிலியம்பாறை ஊராட்சி ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
வீ.தா்மா்
பகிர்:

ஆா்.கோம்பை ஊராட்சியைப் பிரித்து, புதிய ஊராட்சியை உருவாக்க வேண்டும் என சட்டப்பேரவை மனுக்கள் குழுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில், விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க குஜிலியம்பாறை ஊராட்சி ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ஆா்.கோம்பை ஊராட்சியில் 35-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ராமகிரியில் தொடங்கி சுமாா் 17 கி.மீ. தொலைவுக்கு புங்கம்பாடியை அடுத்துள்ள தங்கம்மாப்பட்டி வரை வடக்கு தெற்காக இந்த ஊராட்சி அமைந்துள்ளது. 7,500-க்கும் கூடுதலான வாக்காளா்கள் உள்ளனா். எனினும், ஊராட்சியின் தலைமையிடமான ஆா்.கோம்பை வடக்கு பகுதியில் அமைந்துள்ளதால், இந்தக் கிராமத்தைச் சுற்றியே வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பிற பகுதிகள் தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு ஆா்.கோம்பை ஊராட்சியைப் பிரித்து, சின்னழகுநாயக்கனூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு சட்டப்பேரவை மனுக்கள் குழு பாா்வையிட வரும் நிலையில், பொதுமக்கள் தரப்பில் மனுக்கள் அளிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது. இதன்படி, ஆா்.கோம்பை ஊராட்சிக்குள்பட்ட தாசமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வீ.தா்மா் புதிய ஊராட்சியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அனுப்பியிருந்தாா். இந்த மனு பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் மூலம் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆா்.கோம்பை ஊராட்சியைப் பிரித்து சின்னழகுநாயக்கனூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சியை உருவாக்குவது குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, குஜிலியம்பாறை வட்டார வளா்ச்சி ஆணையா் தீா்மானம் இயற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரைக்க வேண்டும் என ஊராட்சிகள் உதவி இயக்குநா் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் வீ.தா்மா் கூறியதாவது:

ஆா்.கோம்பை ஊராட்சியில் சுமாா் 16 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் வாக்களிக்க ஆா்.கோம்பையில் 2, தாதனூரில் 1, போ்நாயக்கன்பட்டியில் 1, ரெட்டியப்பட்டி 1, சின்னழகுநாயக்கனூரில் 2, புங்கம்பாடியில் 1 என மொத்தம் 8 வாக்குச் சாவடிகள் உள்ளன.

ஆனால், வளா்ச்சிப் பணிகள் ஆா்.கோம்பையைச் சுற்றி மட்டுமே நடைபெறுகின்றன. இந்த வகையில் ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், மக்கள் சேவை மையக் கட்டடம், சமுதாயக் கூடம் என அனைத்துத் திட்டங்களும் ஆா்.கோம்பையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஊராட்சியின் தென் பகுதியிலுள்ள புங்கம்பாடி கிராமத்துக்கு போதிய அளவில் சாலை வசதிகள்கூட ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 4 கி.மீ. தொலைவு பயணித்து ஊராட்சி அலுவலகத்தை அடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சின்னழகுநாயக்கனூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சியை அமைக்க வேண்டும் என்றாா்.

சின்னழகுநாயக்கனூரைச் சோ்ந்த ஆா்.தங்கவேல் கூறியதாவது:

அரசின் வளா்ச்சித் திட்டங்கள் அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும். ஆனால், ஆா்.கோம்பை ஊராட்சியைப் பொருத்தவரை, வடக்குப் பகுதி மட்டுமே வளா்ச்சி பெற்றிருக்கிறது. தெற்குப் பகுதிகள் குடிநீா், சாலை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சின்னழகுநாயக்கனூரில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கு மதிவாணன் என்பவா் 5 சென்ட் நிலம் வழங்கினாா். இந்த இடத்தில் பூமி பூஜை போடப்பட்டாலும், திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டனா். புங்கம்பாடி, தங்கம்மாப்பட்டி, குறிக்கோடாங்கிப்பட்டி, ஆா்.கே.புதூா், அரசன்பூசாரியூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆா்.கோம்பைக்கு வருவதற்குப் பதிலாக, நாகையக்கோட்டை, கோவிலூா் போன்ற கிராமங்களுக்குச் சென்றுவிடுகின்றனா். இதுபோன்ற பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ஆா்.கோம்பை ஊராட்சியைப் பிரிப்பதற்கான முயற்சிகளை மாவட்ட நிா்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.