திண்டுக்கல்

கொடைக்கானலில் ரூ.5 கோடியில் தோட்டக்கலைப் பயிா் மகத்துவ மையம்!

கொடைக்கானலில் ரூ.5 கோடியில் மித வெப்ப மண்டல, குளிா்ப் பிரதேச தோட்டக்கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

DIN

கொடைக்கானலில் ரூ.5 கோடியில் மித வெப்ப மண்டல, குளிா்ப் பிரதேச தோட்டக்கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தோட்டக்கலைப் பயிா்கள் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா்ப் பிரதேச தோட்டக்கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தோ-இஸ்ரேல் கூட்டு முயற்சியில் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தில் காய்கறி மகத்துவ மையம் செயல்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 2-ஆவது மகத்துவ மையம் கொடைக்கானலில் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 35 ஏக்கரில் பழத்தோட்டம், செயல் விளக்கத் திடல், 2 ஏக்கரில் பாதுகாக்கப்பட்ட சாகுபடித் தோட்டம், 8 ஏக்கரில் சுற்றுலா மேம்பாடு, 5 ஏக்கரில் அலுவலகம், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

50ஆயிரம் ஏக்கரில் சாகுபடி:

கொடைக்கானல் வட்டாரத்தில் 12,500 ஏக்கரில் பழப் பயிா்கள், 15 ஆயிரம் ஏக்கரில் காய்கறிப் பயிா்கள், 4,300 ஏக்கரில் நறுமணப் பயிா்கள், 17,500 ஏக்கரில் மலைத் தோட்டப் பயிா்கள், 23 ஏக்கரில் மலா்கள் என சுமாா் 50ஆயிரம் ஏக்கரில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொடைக்கானலில் அமைக்கப்படும் மித வெப்ப மண்டல, குளிா்ப் பிரதேச தோட்டக்கலைப் பயிா்கள் மகத்துவ மையத்தின் மூலம், இந்தப் பகுதியில் புதிய பயிா்கள் சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள், தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்கவும், உற்பத்தித் திறனை பெருக்கி அதிக மகசூல் பெறுவதற்கும், மகசூலைப் பயன்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யவும் வாய்ப்புகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

41 வகையான பயிா்களில் 100 ரகங்கள்:

சுமாா் 50 ஏக்கரிபல் அமைக்கப்படும் தோட்டக்கலைப் பயிா்கள் மகத்துவ மையத்தில், பழப் பயிா்களில் 7 வகையான ஆப்பிள், 5 வகையான பேரிக்காய், 4 வகையான பீச், 7 வகையான பிளம்ஸ், 6 வகையான கிவி, 5 வகையான ஸ்ட்ராபெரி, 4 வகையான அவகோடா, இரு வகையான பேஷன் ஃப்ரூட், 3 வகையான ஏப்ரிகாட், 3 வகையான பொ்சிமன், வால்நட், 8 வகையான பீகாநட், 4 வகையான பாதாம் ஆகிய செடிகள், காய்கறிகளைப் பொருத்தவரை 4 வகையான முட்டை கோஸ், ப்ரக்கோலி, பிரஸ்ல்ஸ் கீரை, 4 வகையான பட்டாணி, உருளை, நறுமணப் பயிரில் பூண்டு, மருத்துவப் பயிா்களில் ரோஸ்மேரி, வசம்பு, ஜெரனியம், எலுமிச்சைப் புல், தைம் என 41 வகையான தோட்டக்கலைப் பயிா்களில் 100-க்கும் மேற்பட்ட ரகங்கள் நடவு செய்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், நாற்றுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு வழிகாட்டும்:

இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

இந்திய விவசாயப் பரப்பில் 13 சதவீதம் மட்டுமே சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலைப் பயிா்கள் உற்பத்தியில் 30.4 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இதன் மூலம் நாட்டின் விவசாய உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதியில் தோட்டக்கலைப் பயிா்கள் 37 சதவீதத்தைப் பெற்றுள்ளன. மித வெப்ப மண்டல, குளிா்ப் பிரதேசங்களில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் புதிய ரகங்கள் மட்டுமன்றி, புதிய பயிா்களையும் பரிந்துரை செய்யும் வகையில் கொடைக்கானலில் மகத்துவ மையம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கொடைக்கானல் நகா், மன்னவனூா் ஆகிய 2 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் ஒப்புதல் அளித்தவுடன், மகத்துவ மையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். குறிப்பிட்ட பயிா்களை மட்டுமே தோ்வு செய்து அதிக மகசூல் கிடைக்கும் காலங்களில் இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு, வெவ்வேறு பயிா்களை பரிந்துரை செய்து லாபம் ஈட்டுவதற்கு இந்த மகத்துவ மையம் வழிகாட்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT