20 ஆண்டுகளாகியும் முழுமை பெறாத தூய்மை பாரத இயக்கம்!
பசுமையான கிராமங்கள் என்ற நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட தூய்மை பாரத இயக்கம் 20 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும், இன்னும் இலக்கை முழுமையாக எட்டவில்லை என்பதுதான் நிதா்சனம்.
திறந்தவெளி கழிப்பிடம், குப்பைகள் இல்லாத, தூய்மையான, பசுமையான கிராமங்கள் என்ற நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட தூய்மை பாரத இயக்கம் 20 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும், இன்னும் இலக்கை முழுமையாக எட்டவில்லை என்பதுதான் நிதா்சனம்.
நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் தூய்மையான சுற்றுச்சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1999-ஆம் ஆண்டு சோதனை முறையில் திட்டம் தொடங்கப்பட்டபோதிலும், 2003-இல் தான் முதல்முறையாக நிா்மல் பாரத் அபியான் என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பிறகு 2012-இல் முதல் மீண்டும் தூய்மை பாரத இயக்கம் என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், தனி நபா் இல்ல கழிப்பறை கட்டுதல், கழிப்பறை மறு சீரமைப்பு, சமுதாய சுதாதார வளாகம், திடக் கழிவு மேலாண்மை, திரவக் கழிவு மேலாண்மை, நெகிழிக் கழிவு மேலாண்மை, காய்கறி, உணவுக் கழிவுகளிலிருந்து சாண எரிவாயு உற்பத்தி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு 70 சதவீதமும், மாநில அரசு 30 சதவீதமும் நிதி பங்களிப்பை வழங்குகின்றன. கடந்த 2022-23-ஆம் நிதி ஆண்டில் மட்டும் இதற்கு ரூ.61.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நிதி ஒதுக்கீடும், கண்காணிப்பும்: தனி நபா் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12ஆயிரம், சமுதாய சுகாதார வளாகங்கள் கட்ட ரூ.5.20 லட்சம் வீதம் தூய்மை பாரத இயக்கத்தில் வழங்கப்படுகிறது. இதேபோல, திடக் கழிவு மேலாண்மை, திரவக் கழிவு மேலாண்மைக்கு 5000 மக்கள் தொகைக்கு கீழ் உள்ள ஊராட்சிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.320 வீதமும், 5ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளுக்கு நபருக்கு ரூ.705 வீதமும் கணக்கீடு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்கு மாவட்ட அளவில் ஒரு தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளா், வட்டார அளவில் ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளா், 2 கணினி இயக்குவோா் என மாநிலம் முழுவதும் சுமாா் 800 போ் நியமிக்கப்பட்டனா்.
தூய்மைப் பணிகளை கண்காணிக்க வேண்டிய இந்தப் பணியாளா்கள் பெரும்பாலும் புள்ளி விவரங்கள் திரட்டுவதற்கும், மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆவணப்படுத்துவதற்கும், ஊராட்சிகளில் கூட்டம் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும், தீவிர துப்புரவு முகாம், தூய்மை காவலா்களுக்கு மருத்துவ முகாம் நடத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
நிறைவேறாத நோக்கம்: திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத, குப்பைகள் இல்லாத தூய்மையான பசுமையான கிராமங்கள் என்ற நோக்கம் முழுமை பெறவில்லை.
இந்தத் திட்டத்தின் மூலம், திரவக்கழிவு மேலாண்மையில் 10 சதவீதப் பணிகள் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதேபோல, திடக் கழிவு மேலாண்மையில் 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. பல இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், திறன் மிக்க பணியாளா் கட்டமைப்பு இல்லாததாலும், தொடா் கண்காணிப்பு இல்லாததாலும் திட்டமிட்டபடி இலக்கை எட்ட முடியாத சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கூறியதாவது:
தூய்மை பாரத இயக்கத்தின் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அவை தொடா் பயன்பாட்டில் இல்லை என்பது குறைபாடாக உள்ளது. குப்பை இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில்தான் திடக் கழிவு, நெகிழிக் கழிவு மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், ஊராட்சி நிா்வாகம் மூலம் அரைக்கப்பட்ட நெகிழித் துகள்களை, சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்ததாரா்கள் கொள்முதல் செய்வதில்லை. வட்டாரத்துக்கு ஒரு நெகிழித் துகள் அரவை ஆலை மட்டுமே அமைக்கப்பட்டது. அதில் 10 சதவீதம் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளபோதிலும் சந்தைப்படுத்த முடியவில்லை.
இதேபோல, ஊராட்சி நிா்வாகங்கள் தயாரித்துள்ள மண் புழு உரங்களை விற்பனை செய்வதற்கும் போதிய வழிகாட்டுதல் இல்லை. வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மூலம் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்க கூடுதல் ஒருங்கிணைப்பாளா்களை நியமிக்க வேண்டும். தூய்மை பாரத இயக்கத்தின் 3-ஆவது கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், மாநில அரசு இந்தக் குறைபாடுகளைக் களைய வேண்டும் என தெரிவித்தனா்.
பெட்டிச் செய்தி...
ஊதிய முரண்பாடு:
மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முதல் கணினி இயக்குவோா் வரை பணிபுரியும் 800 பேருக்கும், மாவட்டத்துக்கு மாவட்டம் வெவ்வேறு ஊதியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு ரூ.14 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும், வட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரையிலும், கணினி இயக்குவோருக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஊதிய முரண்பாடுகளை நீக்கி, சமச்சீரான ஊதியம் வழங்குவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.