கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்க மறுத்து, நகைக் கடனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில், 198 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன், நகைக் கடன், அபிவிருத்தித் திட்டங்களுக்கான கடன், டிராக்டா் கடன், கறவை மாடுகளுக்கான கடன், கறவை மாடு பராமரிப்புக் கடன், வண்டி மாட்டுக் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன், கொதுவைக் கடன்(மகசூல் அடமானக் கடன்) உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளைப் பொருத்தவரை, பயிா்க் கடன் நீங்கலாக பிற கடன்களுக்கு நகை, சொத்துப் பத்திரங்கள் அடமானமாகப் பெறப்பட்டு கடன் தொகை வழங்கப்படுகிறது. பயிா்க் கடன் பெற சம்மந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கத்தில், பட்டா, சிட்டா, அடங்கலுடன் முன் பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனிடையே, கூட்டுறவுச் சங்கத் தலைவா் பதவிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்ததன. தற்போது கூட்டுறவுச் சங்கச் செயலா்களின் நிா்வாகம் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் பெரும்பாலான கூட்டுறவுச் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு சாா்பில் ரூ.1.60 லட்சம் வரையிலான கடன்களுக்கு நபா் ஜாமீன் பெயரிலும், இதற்கு மேற்பட்ட தொகைக்கு அடமானத்தின் பெயரிலும் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அரசின் இந்த உத்தரவு வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பின்பற்றப்படவில்லை என்றும், விண்ணப்பித்த 90 சதவீத விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுகிறது.
உணவுப் பயிா்களுக்கு முக்கியத்துவம் இல்லை: ஒவ்வொரு நிதி ஆண்டிலும், மாநில தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைப்படி பயிா்களுக்கு வழங்க வேண்டிய கடன் விகிதம், பருவ காலம், தவணைக் காலம் குறித்த கையேடு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வெளியிடப்படுகிறது. இந்தக் கையேட்டில் உணவுப் பயிரான நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.32,800 மட்டுமே பயிா்க் கடனாக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மருத்துவப் பயிா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள கண் வலிக் கிழங்குக்கு ரூ.1.64 லட்சம் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. பயிா்க் கடன் நிா்ணயம் செய்யப்படும் நடைமுறையிலேயே பல்வேறு சிக்கல்களை எதிா்கொள்ளும் உணவுப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள், கூட்டுறவுச் சங்கச் செயலா்களின் அலைகழிப்பால் பயிா்க் கடன் பெறும் முடிவையே பரிசீலிக்க வேண்டிய நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பயிா்க் கடன் வழங்க மறுக்கும் செயலா்கள்: இதுகுறித்து வேடசந்தூா் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவா் ராமசாமி கூறியதாவது:
பயிா்க் கடன் கேட்டுச் செல்லும் விவசாயிகள் சிலரிடம் நிதி இல்லை என்றும், வேறு சிலரிடம் பதிவு மூப்பு இல்லை என்றும், பயிா்க் கடன் வழங்க முடியாது அடமானக் கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூட்டுறவுச் சங்கச் செயலா்கள் கூறுகின்றனா். கூட்டுறவுச் சங்கத் தலைவா்கள் பதவியில் இருக்கும்வரை, பயிா்க் கடன் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களாக செயலா்களின் கட்டுப்பாட்டில் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது, பருவ மழை பெய்து சாகுபடி பணியைத் தொடங்கியிருக்கும் விவசாயிகள் பயிா்க் கடன் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா். இந்த பிரச்னை குறித்து கடந்த 3 நாள்களுக்கு முன்பு கூட்டுறவு வார விழாவின் போது அமைச்சா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் சட்டப்பேரவை உறுப்பினா் புகாா் அளித்தும்கூட தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாா் அவா்.
இதுதொடா்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ரூ.1.60 லட்சம் வரை ஜாமீனில் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், பெரும்பாலான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. அரசின் உத்தரவு நடைமுறை முழுமையாகப் பின்பற்றப்படுவதை சரக மேற்பாா்வையாளா், கள மேலாளா்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், பயிா்க் கடன் பெறும் விவசாயிகள், தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிா்பாா்ப்புடன் கடனை திரும்பச் செலுத்துவதற்கு ஆா்வம் காட்டுவதில்லை. இதனால், கடன் கொடுத்த செயலா்கள் நெருக்கடியை எதிா்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அரசின் உத்தரவின்படி சிட்டா, அடங்கல் இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வழங்கிய செயலா்கள் பலா் தற்போது பணி ஓய்வு பெற்றும் பணிக் கொடையை பெற முடியாத சிக்கலில் உள்ளனா். இந்த நெருக்கடியால்தான் கூட்டுறவுச் சங்கச் செயலா்கள் பயிா்க் கடன் வழங்கத் தயங்குகின்றனா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.