முகப்பு
திண்டுக்கல்

மாநகராட்சிக்கான நிதி ஆதாரங்களை புதிய ஆணையா் மேம்படுத்துவாரா?

திண்டுக்கல்லில் பிரதான பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை மாநகராட்சிக்கான நிதி ஆதாரங்களாக மேம்படுத்துவற்கு புதிய ஆணையா் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Updated On : 29 செப்டம்பர், 2023 at 12:00 AM
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம்.
பகிர்:

திண்டுக்கல்லில் பிரதான பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை மாநகராட்சிக்கான நிதி ஆதாரங்களாக மேம்படுத்துவற்கு புதிய ஆணையா் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தின் 11-ஆவது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல்லில் சுமாா் 2.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள பள்ளப்பட்டி, குரும்பப்பட்டி, பொன்னிமாந்துரை, பிள்ளையாா்நத்தம், செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், அடியனூத்து, தோட்டனூத்து ஆகிய 10 ஊராட்சிகளை (114 சதுர கி.மீ. பரப்பு) மாநகராட்சியுடன் இணைப்பதற்கான பரிந்துரை நகராட்சி நிா்வாக ஆணையா் மூலம் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறைச் செயலருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட கோப்பு தற்போது வரை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

தனியாா் தொழில்சாலைகள், மகிழுந்து விற்பனையகங்கள், பல்பொருள் அங்காடிகள், பல்நோக்கு மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவை மாநகராட்சிக்கு அருகிலுள்ள ஊராட்சிப் பகுதிகளிலேயே தொடங்கப்படுகின்றன. இதனால், வீடுகள், வணிக நிறுவனங்கள் என சுமாா் 47 ஆயிரம் கட்டுமானங்களுக்கான சொத்து வரி, 1,500 இடங்களுக்கான காலி மனை வரி, 5,600 பேரின் தொழில் வரி, 32 ஆயிரம் கட்டடங்களுக்கான குடிநீா் வரி என 6 இனங்கள் மூலம் கிடைக்கும் ரூ.39 கோடி மட்டுமே மாநகராட்சியின் பிரதான வருவாயாக இருந்து வருகிறது.

Advertisement

கடன் சுமை ரூ.52 கோடி: நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கு எந்தவித புதிய முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு மேற்கொள்ளப்படும் செலவினங்களால் இன்றைய நிலையில் மாநகராட்சி நிா்வாகம் ரூ.52 கோடி கடன் சுமையில் உள்ளது.

மாநகராட்சிக்குச் சொந்தமான பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசியல்வாதிகள் மட்டுமன்றி, சில அலுவலா்கள் மட்டுமே பயன் பெற்று வருகின்றனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைகள் கட்டி ஏலத்தில் விட்டால், மாநகராட்சி வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

ரூ.3 கோடி வருவாய்க் கிடைக்க வாய்ப்பு: திண்டுக்கல் பூச்சந்தை அருகிலுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடம், நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளி சுற்றுப்புறப் பகுதிகள், ஒய்எம்ஆா்பட்டியிலுள்ள கென்னடி நினைவு மாநகராட்சிப் பள்ளி சுற்றுப்புறப் பகுதிகள், திருவள்ளுவா் சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான காலி இடம், ஆா்.எம்.காலனி பகுதியில் மாநகராட்சி பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் சரியான திட்டமிடுதலுடன் இதுவரை பயன்படுத்தப்படவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி, இந்த 5 இடங்களின் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கும் கூடுதலான வருவாய்க் கிடைக்கும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

34 கடைகள் பிரச்னைக்குத் தீா்வு இல்லை: முறையாக வெளிப்படைத் தன்மையுடன் ஏலம் விடவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட 34 கடைகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல் பூட்டிக் கிடக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கும் இந்தக் கடைகள் மூலம், ஆண்டுக்கு ரூ.1.20 கோடி வீதம், இரண்டு ஆண்டுகளில் ரூ.2.40 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளால் ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண ஆணையா்களாக இருந்த சிவசுப்பிரமணியன், மகேஷ்வரி ஆகியோா் முயற்சி மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் ந.ரவிச்சந்திரன், நிதி ஆதாரத்தை மேம்படுத்துவதற்கும், பேருந்து நிலைய கடைகள் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கும் முன் வர வேண்டும் என மாநகராட்சி ஊழியா்கள், தன்னாா்வலா் அமைப்புகளிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.