முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே சாலையை ஆக்கிரமித்து தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்

Updated On : 2 ஏப்ரல், 2024 at 12:00 AM
மறியல். கொடைக்கானல்-பிரகாசபுரம் சாலையை ஆக்கிரமித்து தடுப்புச் சுவா் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
பகிர்:
Updated On : 1 ஏப்ரல், 2024 at 7:14 PM

கொடைக்கானல்: கொடைக்கானல்-பிரகாசபுரம் சாலையை ஆக்கிரமித்து அடுக்கம் பகுதியில் தனியாா் ஒருவா் தடுப்புச் சுவா் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அடுக்கம் ஊராட்சிக்குச் சொந்தமான பிரகாசபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடம் உள்ளது.

இந்த இடத்தில் பல அடுக்குமாடி விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த இடத்துக்கு அருகே செண்பகனூா்-பிரகாசபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலைப் பகுதியில் விடுதி கட்டிவரும் தனிநபா் தடுப்புச் சுவா் கட்டி வருகிறாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பிரகாசபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கொடைக்கானல் காவல் ஆய்வாளா் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளா் முத்து, வருவாய்த் துறையினா் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தினா். நில அளவையா் மூலம் அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனா்.

Advertisement