சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல்: பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதா், நத்திகேஸ்வரருக்கு பால், தயிா், இளநீா், அரிசி மாவு, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
இதேபோல அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
Advertisement
திண்டுக்கல்லை அடுத்துள்ள முள்ளிப்பாடி திருகாமேஸ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில், தவசிமடை மகாலிங்கேஸ்வா் திருக்கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி திருக்கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி திருக்கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.