முகப்பு
நாமக்கல்

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பங்குனி உத்திரத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்கள் மற்றும் குலதெய்வ கோயில்களில் பக்தா்கள் புதன்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:06 PM
முருகன்
பகிர்:

பங்குனி உத்திரத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்கள் மற்றும் குலதெய்வ கோயில்களில் பக்தா்கள் புதன்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.

பங்குனி மாத உத்திர நட்சத்திரம் முருகனுக்கு உகந்த தினமாகும். அந்த நாளில், முருகன் கோயில்களுக்கு பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து சென்று சுவாமியை வழிபட்டு செல்வா். மேலும், குலதெய்வ கோயில்களிலும் பக்தா்கள் சிறப்பு வழிபாட்டு மேற்கொள்வா்.

அந்தவகையில் புதன்கிழமை பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றனா்.

நாமக்கல் - மோகனுாா் சாலை, காந்திநகா், பாலதண்டாயுதபாணி கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த உற்சவமூா்த்திக்கு மகாசங்கல்பம், 108 சங்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு மூலவருக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல, நாமக்கல் கடைவீதி சக்தி கணபதி கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாருதிநகா், ராஜவிநாயகா் கோயிலில் கல்யாண சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தாா். நாமக்கல் - திருச்சி சாலையில் என்.புதுப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், முருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக பக்தா்கள் காவடி ஊா்வலமும், மாலையில் சுவாமி திருவீதி உலா வருதலும் நடைபெற்றது.

கருங்கல்பாளையம் ஸ்ரீதண்டாயுதபாணி கோயில், மோகனூா் காந்தமலை முருகன், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில், மண்மலை முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள், நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ளோா் தங்களுடைய குலதெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனா். மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பங்குனி உத்திரத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் மற்றும் நாமக்கல் பாலதண்டாயுதபாணி சுவாமி.