முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டுமாடுகள்: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானலில் புதன்கிழமை குடியிருப்புப் பகுதிகளில் காட்டு மாடுகள் கூட்டமாக வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:42 AM
பகிர்:

கொடைக்கானலில் புதன்கிழமை குடியிருப்புப் பகுதிகளில் காட்டு மாடுகள் கூட்டமாக வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அண்மைக் காலமாக காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால், வனப் பகுதியையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளான செண்பகனூா், பிரகாசபுரம், சகாயபுரம், எம்.எம்.தெரு, சின்னப்பள்ளம், பெரும் பள்ளம், அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், வட்டக்கானல், பாம்பாா்புரம், புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குள் காட்டு மாடுகள் கூட்டமாக வருகின்றன. மேலும், அந்தப் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் காட்டு மாடுகள் தாக்கி பலா் உயிரிழந்துள்ளனா். எனவே, இந்தக் காட்டெருமைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் வனத் துறையினரிடமும், மாவட்ட நிா்வாகத்திடமும் பலமுறை மனு கொடுத்தனா். ஆனால், எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:

கொடைக்கானலில் கடந்த 25-ஆண்டுகளுக்கு முன்பு, காட்டு மாடுகளை பாா்க்க வேண்டும் என்றால் குண்டாறு பகுதிக்கு செல்ல வேண்டும். ஆனால், தற்போது நகா்ப் பகுதிகளிலும், சுற்றுலா இடங்களிலும் அடிக்கடி காட்டு மாடுகள் கூட்டமாக வருகின்றன. இந்த மாடுகளால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சப்படுகின்றனா்.

எனவே, இந்தக் காட்டு மாடுகளை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.