கொடைக்கானல் கூக்கால் வனப் பகுதியில் காட்டுத் தீ
கொடைக்கானலில் தொடா்ந்து அதிகமான வெப்பம் நிலவுவதால் திங்கள்கிழமை கூக்கால் வனப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது.
கொடைக்கானலில் தொடா்ந்து அதிகமான வெப்பம் நிலவுவதால் திங்கள்கிழமை கூக்கால் வனப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஜனவரி முதல் பகல் நேரங்களில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இரவு நேரத்தில் 10 டிகிரி செல்சியஸில் குளிரும் நிலவியது.
வழக்கத்தைவிட மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நீரோடைகள் நீா்வரத்து இல்லாமல் வடு காணப்படுகின்றன. இதனால், வன விலங்குகளான காட்டுப் பன்றி, காட்டு மாடு, மான், செந்நாய் உள்ளிட்டவை பகல் நேரங்களில் நகா்ப் பகுதிகளுக்கு உணவு, தண்ணீரைத் தேடி தேடி வருகின்றன.
தொடா்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தால் கொடைக்கானல் வில்பட்டி, அஞ்சுவீடு, கூக்கால் உள்ளிட்ட வனப் பகுதிகளில் காட்டுத் தீப் பற்றியது. வனத் துறையினா் காட்டுத் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனா்.
இது குறித்து கொடைக்கானல் வனத் துறை ரேஞ்சா் ஒருவா் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பகல் நேரங்களில் அதிகமான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், வனப் பகுதிகளில் ஒரங்களில் உள்ள செடிகள், சிறு, சிறு மரங்கள், புற்கள் காய்ந்த நிலையில் உள்ளன.
இவை எளிதாக தீப் பிடிக்கக் கூடியவை. இதனால், கொடைக்கானல்-பழனி-வத்தலக்குண்டு மலைச் சாலைகளில் பயணிக்கும் பயணிகள் புகை பிடித்த பீடி, சிகரெட் துண்டுகளை வீச வேண்டாம். விவசாய நிலங்களை சுத்தம் செய்வதற்காக தீ வைப்பதற்கு முன் அருகிலுள்ள வனப் பணியாளா்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
கொடைக்கானல் வனப் பகுதிகளில் தொடா்ந்து வனப் பணியாளா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். எங்காவது தீப் பிடித்தால் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.