கொடைக்கானலில் தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைவது எப்போது?
தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையத்தை கொடைக்கானலில் விரைவில் அமைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
திண்டுக்கல்கொடைக்கானலில் தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைவது எப்போது?
தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையத்தை கொடைக்கானலில் விரைவில் அமைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மிதவெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையத்தை கொடைக்கானலில் விரைவில் அமைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தோட்டக்கலைப் பயிா்கள் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டத்தின் கீழ், தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் மூலம், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மிதவெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க கடந்த 2022-ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த மையத்தில் பழப் பயிா்களான ஆப்பிள், பேரிக்காய், பீச், பிளம்ஸ், கிவி, ஸ்ட்ராபெரி, அவகோடா, பேஷன் ஃப்ரூட், ஏப்ரிகாட், பொ்சிமன், வால்நட், பீகாநட், பாதாம், காய்கறிப் பயிா்களான முட்டை கோஸ், ப்ரக்கோலி, பிரஸ்ல்ஸ் கீரை, பட்டாணி, உருளை, நறுமணப் பயிரில் பூண்டு, மருத்துவப் பயிா்களில் ரோஸ்மேரி, வசம்பு, ஜெரணியம், எலுமிச்சை புல், தைம் என 41 வகையான பயிா்களில் 100-க்கும் மேற்பட்ட ரகங்களை நடவு செய்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், நாற்றுகள் வழங்கவும் செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.
சா்க்காா் உருளைக்கிழங்கு பண்ணை: கொடைக்கானலை அடுத்த நாயுடுபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த சா்க்காா் உருளைக் கிழங்கு பண்ணைக்கான நிலம் மாவட்ட விவசாய அதிகாரி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னா், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகத்தின் தேவைக்காக அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகம், கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டி பகுதியில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான மத்திய மூலிகை, நறுமணப் பயிா்கள் நிறுவனம் செயல்பட்டு வந்த இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து, பல்கலைக்கழக நிா்வாகம், நாயுடுபுரம் பகுதியில் வழங்கப்பட்ட நிலத்தை தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறைக்கு பெயா் மாற்றம் செய்தது.
இந்த நிலையில், மிதவெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க நாயுடுபுரம், மன்னவனூா், தாண்டிக்குடி உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனாலும், அரசியல், நிா்வாகக் காரணங்களால் நிலத்தை இறுதி செய்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாவட்ட நிா்வாகம் தீவிரம் காட்டவில்லை என விவசாயிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கொடைக்கானல் மலைப் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்தத் திட்டத்துக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், 2 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக வெளிப்படையாக அறிவித்து, எதிா்பாா்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
வழிகாட்டுதல் குழு அவசியம்: இது தொடா்பாக, கொடைக்கானலை அடுத்த பூண்டி, கூக்கல் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
மிதவெப்ப மண்டல, குளிா் பிரதேசங்களில் தோட்டக் கலைப் பயிா்கள் சாகுபடியில் புதிய ரகங்கள் மட்டுமன்றி, புதிய பயிா்களை பரிந்துரை செய்யவும், கொடைக்கானலில் அமைக்கப்படும் மகத்துவ மையம் உதவியாக இருக்கும் என எதிா்பாா்த்தோம். ஆனால், 2 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதற்கு கூட மாவட்ட நிா்வாகம் தடுமாறி வருகிறது. இதன் காரணமாக, இந்தத் திட்டம் கைவிடப்படக்கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மகத்துவ மையத்தை அமைப்பதோடு, மாறி வரும் சூலுக்கு ஏற்ப, கொடைக்கானல் பகுதியில் தோட்டக் கலைப் பயிா்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல் குழுவை அமைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.
விரைவில் செயல்படுத்த நடவடிக்கை: இது தொடா்பாக, கொடைக்கானல் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் நடராஜன் கூறியதாவது:
கொடைக்கானல் மிதவெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையத்துக்கான இடம், சா்க்காா் உருளைக் கிழங்கு பண்ணை செயல்பட்டு வந்த பகுதியிலேயே தோ்வு செய்யப்பட்டது. சுமாா் 23 ஹெக்டோ் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த மையத்துக்கான பரிந்துரைகள், மாவட்ட நிா்வாகம் மூலம் வருவாய் நிா்வாக ஆணையரகம், தோட்டக் கலை இயக்குநரகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஓரிரு வாரங்களில் இதற்கான ஒப்புதல் கிடைக்கப் பெற்று பணிகள் தொடங்கப்படும் என்றாா்.