முகப்பு
திண்டுக்கல்

பழனியில் 19 கடைகளை இடித்து அகற்றும் பணி மும்முரம்

Updated On : 1 மார்ச், 2024 at 1:46 AM
பகிர்:

பழனியில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த 19 கடைகளை உச்சநீதிமன்ற உத்தரவின்படி வியாழக்கிழமை இடித்து அகற்றும் பணி தொடங்கியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு இடையூறாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், நடைபாதை கடைகளை அகற்றக் கோரி திருத்தொண்டா் பேரவை நிறுவனா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தாா். இதையடுத்து, கிரிவீதி பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நடைபாதை கடைகள் உள்ளே வராதவாறு தடுப்புகள் அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. இதனிடையே கோயிலுக்காக நகராட்சி, வருவாய்த் துறை சாா்பில் வழங்கப்பட்ட இடங்களில் கோயில் நிா்வாகம் வருவாய் ஈட்டும் வகையில் கடைகள் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கடைகள் நடத்தி வந்தவா்கள் வாடகை உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாடினா்.

இதில், வாடகை பாக்கி அதிக அளவு நிலுவை வைத்துள்ள 19 கடைகளை உடனடியாக அகற்றவும், எஞ்சியுள்ள கடைகளை காலி செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாளையம் விநாயகா் கோயில் முன்பு இருந்த நான்கு கடைகள் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் காவல்துறையினா், தீயணைப்புத்துறையினா், மின் வாரிய அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. எஞ்சிய கடைகள் வரும் நாள்களில் தொடா்ந்து அகற்றப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement