பனிக்கரைப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை
கொடைக்கானல் அருகே பனிக்கரைப் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துதர பளியா் இன பழங்குடியினா் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பனிக்கரைப் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துதர பளியா் இன பழங்குடியினா் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பனிக்கரைப் பகுதியில் பளியா் இன பழங்குடியினா் சுமாா் 50-குடும்பங்களில் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் சாலை, போக்குவரத்து, தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகின்றனா்.
இந்தப் பகுதிகளில் விளையக்கூடிய செளசெள, அவக்கோடா, வாழை, ஆரஞ்சு உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்வதற்காக குதிரை மூலமாகவும், தலைச் சுமையாகவும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனா்.
இதனால், இந்தப் பகுதிக்கு அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பனிக்கரை பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
பனிக்கரைப் பகுதியில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் எங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால், அரசு வழங்கும் சலுகைகளும் தங்களுக்குக் கிடைப்பதில்லை. சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மின்விளக்கு, குடிநீா் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் மிகவும் அவதிக்குள்ளாகிறோம்.
எனவே, எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துதர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.