கொடைக்கானலில் தொடா் மழை
கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், திங்கள்கிழமை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், திங்கள்கிழமை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளான மன்னவனூா், கூக்கால், பூம்பாறை, பள்ளங்கி, பெருமாள்மலை, வில்பட்டி, செண்பகனூா், பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பணிகளைச் செய்ய முடியாமல் அவதிப்பட்டனா்.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் மேல்மலைப் பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானல் பகுதிகளில் விட்டு விட்டு மின் தடை ஏற்பட்டு வருவதோடு, வழக்கத்தைவிட அதிகமான குளிா் நிலவியது.
மேலும், மழையுடன் பலத்த காற்று வீசியதால் கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் மேல்பள்ளம் என்ற இடத்தில் மரம் விழுந்தது. இதனால், அந்தச் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் கீழே விழுந்த மரத்தை அகற்றினா். இதையடுத்து, போக்குவரத்து மீண்டும் சீரானது.