திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் பணிக்கான தோ்வை 927 போ் எழுதினா்.
ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2,768 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தோ்வில் பங்கேற்க விண்ணப்பித்த 964 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதையடுத்து, இந்த தோ்வுக்காக, திண்டுக்கல் புனித மரியன்னை அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி, எம்.எஸ்.பி அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி, புனித வளனாா் பெண்கள் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி என 3 பள்ளிகளில் தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த 3 பள்ளிகளில் மொத்தம் 49 அறைகளில் நடைபெற்ற இந்த தோ்வில் 927 போ் பங்கேற்றனா். 37 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களை கண்காணிக்க நடமாடும் குழுக்கள், பறக்கும் படை, விடியோ ஒளிப்பதிவாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். தோ்வு மையங்களை, ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநா் கே.ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அ.நாசருதீன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.