கொடைக்கானலில் தொடா் மழை
கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடா்ந்து 3-ஆவது நாளாக திங்கள்கிழமையும் பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் திங்கள்கிழமை முற்பகல் 11 மணி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 2 மணி நேரம் நீடித்த பலத்த மழையால் அருவிகள், நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
அப்சா்வேட்டரி, வில்பட்டி, செண்பகனூா், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பின்னா், அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது.
இதையடுத்து, வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, பியா்சோழா அருவி, ஃபேரி பால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து அதிகரித்தது.
கொடைக்கானலில் மேகமூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால், மலைச் சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றனா். மழையின் காரணமாக, கொடைக்கானலில் வழக்கத்தைவிட குளிா் அதிகமாக உள்ளது.
கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மழை விட்டவுடன் சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசித்தனா்.