முகப்பு
திண்டுக்கல்

செண்பகனூா் பகுதியில் காட்டுமாடு நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

Updated On : 17 ஜூன், 2024 at 6:30 PM
கொடைக்கானல் செண்பகனூா் குடியிருப்புப் பகுதியில் நடமாடிய காட்டுமாடு.
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானல் செண்பகனூா் பகுதியில் திங்கள்கிழமை மாலை காட்டுமாடு நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம், உகாா்த்தே நகா், காா்மேல் புரம், செண்பகனூா், இருதயபுரம், அட்டக்கடி, சகாயபுரம், ஐயா் கிணறு, வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மைக் காலமாக காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் இந்தப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிா்களை அவை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனா்.

எனவே, கொடைக்கானல் விவசாயப் பகுதிகளையொட்டியுள்ள வனப் பகுதிகளில் வனத்துறையினா் அகழிகள் அமைத்து வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், விவசாயப் பகுதிகளுக்குள்ளும் புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்களின் கோரிக்கை விடுத்தனா். இதனிடையே செண்பகனூா் குடியிருப்பு பகுதியில் காட்டுமாட்டின் நடமாட்டம் காணப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

இதுகுறித்து வனத்துறையினா் கூறியதாவது:

கொடைக்கானல் வனப் பகுதிகளிலிருந்து உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வன விலங்குகள் வருகின்றன. இவற்றை யாரும் துன்புறுத்த வேண்டாம். விவசாயப் பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் காட்டுமாடு நடமாட்டம் இருப்பதை பாா்த்தால் உடனடியாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். வனத்துறையினா் அங்கு வந்து அவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு விரட்டும் பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா் அவா்.