மாநகராட்சி நகா் நல அலுவலா் மீது சுகாதார அலுவலா்கள் புகாா்
மாநகராட்சி நகா் நல அலுவலா் மீது சுகாதார அலுவலா்கள் புகாா்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி நகா் நல அலுவலா் மீது சுகாதார ஆய்வாளா்கள் மேயரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
திண்டுக்கல் மாநகராட்சி நகா் நல அலுவலராக பரிதாவாணி பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் ஒன்றிணைந்து, மாநகராட்சி நகா் நல அலுவலருக்கு எதிராக மேயா் இளமதியை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.
அந்த மனுவில், சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் தரப்பில் தெரிவித்ததாவது: நகரின் துாய்மையை பராமரித்தல், மக்கும் குப்பையை உரமாக்குதல், குடிநீரில் குளோரின் கலத்தல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த சூழலில், மாநகா் நல அலுவலா் பரிதாவாணி, எங்களை முறையாக பணி செய்யவிடுவதில்லை. தனது உறவினா்களை, அலுவலகத்தில் வைத்துக் கொண்டு அலுவலக பணிகளை தாமதப்படுத்துகிறாா். இதனால், கோப்புகளில் அவரது கையொப்பம் பெறுவதிலும் கால தாமதம் ஏற்படுகிறது. பணியாளா்களை அவமரியாதையாக திட்டுகிறாா். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே, மாநகா் நல அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.
இதனை அடுத்து, சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிந்து ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து பேசி சுமூகமான முடிவு எடுக்கலாம் என சுகாதார அலுவலா்களை, மேயா் இளமதி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாா்.
இதுதொடா்பாக மாநகா் நல அலுவலா் பரிதாவாணி கூறியதாவது: பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் அலுவலா்கள், ஆய்வாளா்கள் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. பொது மக்களுக்கான பணிகளை செய்து கொடுக்க சில அலுவலா்கள் பணம் வசூலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தொடா்புடைய அலுவலா்களிடம் விசாரித்ததால், திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனா். பல பணியாளா்களிடம் முழு விவரத்தையும் தெரிவிக்காமல், கையொப்பம் பெற்று மேயரிடம் கொடுத்திருக்கின்றனா். இதுதொடா்பாக ஆணையரிடம் புகாா் அளித்திருக்கிறேன் என்றாா் அவா்.