முகப்பு
திண்டுக்கல்

வருவாய்த் துறையினருக்கு ஆதரவாக அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

Updated On : 8 மார்ச், 2024 at 1:30 AM
பகிர்:

மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறை அலுவலா்களுக்கு ஆதரவாக அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய்த் துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்ட்ட ஊதியம் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாகக் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, கடந்த 27-ஆம் தேதி முதல் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலா்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் மாவட்டத் தலைநகரங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.முபாரக் அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுதந்தி கோரிக்கை விளக்க உரையாற்றினாா். இதில் நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் முருகானந்தம், பேரூராட்சி ஊழியா்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் மகாலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.