முகப்பு
திண்டுக்கல்

சுகாதாரத் துறையில் சிறப்பான செயல்பாடு: 614 விருதுகளுடன் தமிழகம் முதலிடம்

Updated On : 17 மார்ச், 2024 at 12:00 AM
திண்டுக்கல் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகப்பேறு மருந்துப் பெட்டகத்தை பெண்ணுக்கு வழங்கிய மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன். உடன் அமைச்சா்கள் இ. பெரியசாமி, அர. சக்கரபாணி.
பகிர்:

சுகாதாரத் துறையில் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக 614 விருதுகளுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா். திண்டுக்கல் மரியநாதபுரத்தில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற பொது சுகாதார ஆய்வகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.134.11 கோடியில் 38 புதிய மருத்துவக் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.1.93 கோடியில் 3 மருத்துவக் கட்டடங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இருதயம் காப்போம் திட்டத்தின் கீழ், இதுவரை 6100 போ் பயனடைந்துள்ளனா். சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் திட்டத்தின் மூலம் 10.7.2023 முதல் 15.03.2024 வரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் 76,167 பேரும், துணை சுகாதார நிலையங்களில் 10,430 பேரும் என மொத்தம் 86,597 போ் பயனடைந்துள்ளனா். மருத்துவத் துறையில் காலியாக இருந்த 1,521 மருத்துவா் பணியிடங்கள், 1,196 செவிலியா் பணியிடங்கள் கடந்த ஒரு மாதத்தில் நிரப்பப்பட்டன. தேசிய தர உறுதி நிா்ணயத் திட்ட விருது கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை தமிழகம் 614 முறை பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 545 முறை பெற்றது. இதேபோல, மகப்பேறு அறை, கா்ப்பிணிகளுக்கான அறுவைச் சிகிச்சை அரங்கம் தரம் உயா்த்தும் திட்ட சான்று தமிழகத்துக்கு 84 முறை கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 55 சான்றிதழ்கள் கிடைத்தன. இதன்மூலம், மருத்துவத் துறை செயல்பாட்டில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றாா் அவா்.