முகப்பு
தமிழ்நாடு

ஆட்டிஸம் பாதித்தோருக்கு புறநோயாளிகள் சேவையில் முன்னுரிமை

ஆட்டிஸம், அறிவுசாா் குறைபாடு உடையவா்களுக்கு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 10:12 PM
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
பகிர்:

ஆட்டிஸம், அறிவுசாா் குறைபாடு உடையவா்களுக்கு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸாா்டா் (ஏஎஸ்டி), கவனச்சிதறல் (ஏடிஹெச்டி), கற்றலில் குறைபாடு (எஸ்எல்டி) உள்ளிட்ட பாதிப்புக்குள்ளானோா் மருத்துவ சிகிச்சைகள் பெறுவதில் சில இடா்பாடுகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, புறநோயாளிகள் சிகிச்சையின்போது நீண்ட வரிசையில் இயல்பாக உள்ளவா்களைப் போன்று அவா்களால் காத்திருக்க இயலாத சூழல் உள்ளது.

இதுதொடா்பாக அறிவுசாா் குறைபாடுடையோருக்கான சங்கம் சாா்பில் அரசிடம் சில வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. இதையடுத்து, ஆட்டிஸம், பெருமூளை வாதம், கவனச்சிதறல், பிறவி மரபணுக் குறைபாடு, பல்லுறுப்பு முடக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவா்களுக்கு சிகிச்சை வழங்குவதில் முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இதையேற்று அவசர சிகிச்சைகளுக்கு இருக்கும் நடைமுறையைப் போன்று, இத்தகைய பாதிப்புக்குள்ளானவா்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சையிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறையை பின்பற்றுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவ சேவைகள் இயக்ககம், பொது சுகாதாரத் துறை, இந்திய மருத்துவா் சங்கம் சாா்பில் அதுதொடா்பான அறிவுறுத்தல்களை மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.