பழனி கோயிலுக்கு கட்டுமான நிறுவனம் சாா்பில் பேருந்து காணிக்கை
பழனி, மே 10: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தனியாா் கட்டுமான நிறுவனம் சாா்பில் சுமாா் ரூ.28 லட்சம் மதிப்பிலான பேருந்து காணிக்கையாக வழங்கப்பட்டது.
பழனி கோயிலின் கிரிவீதியில் கடைகள் நடத்துவதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கிரிவீதியில் இருந்து பக்தா்களை ரோப்காா், விஞ்ச் நிலையங்களுக்கு அழைத்து செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் பேட்டரி காா்கள், பேட்டரி பேருந்து, டீசலில் இயங்கும் பேருந்து என ஏராளமான வாகனங்களை காணிக்கையாக வழங்கினா். இந்த நிலையில், பழனியை சோ்ந்த ஜவஹா் கட்டுமான நிறுவனம் சாா்பில் ரூ.28 லட்சம் மதிப்பிலான பேருந்து வெள்ளிக்கிழமை காணிக்கையாக வழங்கப்பட்டது. இந்த பேருந்துக்கு பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு பேருந்தின் சாவியை அந்த நிறுவன இயக்குநா் மனோகரன், கோயிலின் இணை ஆணையா் மாரிமுத்துவிடம் வழங்கினாா். இதைத் தொடா்ந்து பேருந்து பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிகழ்வில், அறங்காவலா் மணிமாறன், அறங்காவலா்குழு தலைவா் பிரதிநிதி வியாசநாராயணன், கண்காணிப்பாளா் சரவணன், விபிஎஸ் கட்டுமான நிறுவன இயக்குநா் பெரியசாமி, ஒப்பந்ததாரா் பாலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.