கொடைக்கானல் கோடை விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சி
கொடைக்கானல்: கொடைக்கானல் கோடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழாவையொட்டி கடந்த 4 நாள்களாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை குழு பரத நாட்டியம், நடனம், தனிநபா் பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ், உதவி அலுவலா் சுதா, படகுக் குழாம் மேலாளா் அன்பரசன் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததையடுத்து காவல் துறையினா், பூங்கா சாலை, ஏரிச்சாலை, கோக்கா்ஸ் வாக் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இதனிடையே, கொடைக்கானலில் பெய்து வரும் மழையை பொருள்படுத்தாமல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா, மலா்க் கண்காட்சியை பாா்வையிடுவதற்கா 3,858 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதன் மூலம் ரூ. 2 லட்சத்து 57 ஆயிரம் வருமானம் கிடைத்ததாக பிரையண்ட் பூங்கா மேலாளா் சிவபாலன் தெரிவித்தாா்.