முகப்பு
திண்டுக்கல்

பழனி ஆரம்ப சுகாதார மையத்துக்குள் புகுந்த மழை நீரால் நோயாளிகள் அவதி

Updated On : 22 மே, 2024 at 12:29 AM
பகிர்:

பழனி: பழனியில் தொடா்ந்து ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக நகராட்சி ஆரம்ப சுகாதார மையத்துக்குள் மழைநீா் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்தனா்.

இங்கு கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பெரும்பாலானோா் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிா்த்தனா். இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திங்கள்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை பழனி, சுற்றுப்புற கிராமங்களான ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலமுத்திரம், கோம்பைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலை, காந்தி சந்தை சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பழனி மலைக் கோயில் படிப்பாதைகளில் மழைநீா் வெள்ளம் போல வழிந்தோடியது. மேலும், பழனி நகராட்சி ஆரம்ப சுகாதார மையத்துக்குள் மழைநீா் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்தனா். இதையடுத்து அவா்கள் வெளியேற்றப்பட்டனா். நகா்நலஅலுவலா் மனோஜ்குமாா், பணியாளா்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.