லஞ்சம்: உள்ளாட்சி நிதி தணிக்கை அலுவலா்கள் 15 போ் மீது வழக்கு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ளாட்சி நிதி தணிக்கைப் பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை செய்து, ரூ.1.57 லட்சத்தை பறிமுதல் செய்த நிலையில், அந்தத் துறையின் ஆய்வாளா்கள் உள்பட 15 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வரவு செலவுகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள உள்ளாட்சி நிதி தணிக்கைப் பிரிவு உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 2023-24-ஆம் ஆண்டுக்கான கணக்குகள் குறித்து தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைவாக முடித்துக் கொடுக்க தணிக்கைத் துறை அலுவலா்கள் லஞ்சம் பெறுவதாக, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இந்தப் பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா், தணிக்கை அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.
இதனால், அதிா்ச்சி அடைந்த அலுவலா்கள், பீரோ, தட்டச்சு இயந்திரம், இருக்கை உள்ளிட்டவற்றுக்கு அடியில் பணத்தை மறைத்து வைத்தனா். அலுவலக அறையைப் பூட்டி வைத்து, சுமாா் 6 மணி நேரம் ஆய்வு நடத்திய போலீஸாா் மறைத்து வைக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனா்.
அலுவலகத்தில் யாரிடம் எவ்வளவு அரசுப் பணம் உள்ளது என்பது குறித்த குறிப்பேடு அங்கு பராமரிக்கப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையைவிட சிலரிடம் கூடுதல் பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஊராட்சிகளில் இருந்து தணிக்கைக்கு வந்தவா்கள் உள்பட மொத்தம் 8 பேரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், உள்ளாட்சி நிதி தணிக்கைப் பிரிவு ஆய்வாளா்கள் 7 போ், ஊராட்சி அலுவலா்கள் 8 போ் என மொத்தம் 15 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.