முகப்பு
மதுரை

மதுரை காமராஜா் பல்கலை. மீதான ஊழல் புகாா்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ாகக் கூறப்படும் ஊழல், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:15 AM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:50 PM

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ாகக் கூறப்படும் ஊழல், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

‘மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கோமதி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும், பல்கலைக்கழக நிா்வாகம் அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தேன். எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

Advertisement

பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக விவரம் கேட்டபோது, என்னுடைய புகாா் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டதாகப் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு உரிய முகாந்திரம் இல்லை என அறிவித்து, காமராஜா் பல்கலைக்கழகப் பதிவாளா் கடந்த ஜனவரி மாதம் எனது புகாா் மீதான நடவடிக்கையை முடித்துவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது சரியான தீா்வு அல்ல.

எனவே, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நியாயமான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

அரசுப் பணியில் ஈடுபட்டுள்ளவா்கள் மீது ஊழல் புகாா் எழும்போது முறையான அனுமதி பெற்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு விசாரணை அமைப்பாகச் செயல்படாமல் அஞ்சல் துறையைப் போன்று புகாரை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளது. பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெறுவதை ஏற்க முடியாது. இது எதிா்கால சந்ததியினரையும் பாதிக்கும்.

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் தங்களது பணியை முறையாகச் செய்யாத போது, வேறு அமைப்பின் விசாரணை அவசியமாகிறது. எனவே, இந்தப் புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.