இளைஞா் கொலை: மூவா் சரண்
திண்டுக்கல்லில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இளைஞரை கொலை செய்த மூவா், காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.
திண்டுக்கல்லில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இளைஞரை கொலை செய்த மூவா், காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.
திண்டுக்கல் மாசிலாமணிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ர.அருண் பாண்டியன் (26). இவரது மனைவி அம்மு. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். அருண்பாண்டியன் தேநீா் கடையில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும், வட்டச் சாலை பகுதியைச் சோ்ந்த சிலருக்கும், கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தி அடைந்தவா்கள், பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ், பழனி வழியாகச் செல்லும் ரயில் தண்டவாளம் அருகே அருண் பாண்டியனின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு புதன்கிழமை கொலை செய்தனா்.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று அருண் பாண்டியன் சடலத்தைக் கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த கொலை தொடா்பாக வட்டச் சாலை புதூா் பகுதியைச் சோ்ந்த தா்மராஜ், ஜெயக்குமாா், கோபி ஆகிய மூவரும் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.