முகப்பு
திண்டுக்கல்

பழனியில் இன்று சூரசம்ஹாரம்; நாளை திருக்கல்யாணம்!

பழனியில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை (நவ.7) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்வாக வெள்ளிக்கிழமை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெறும்.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:47 PM
பழனியில் சூரசம்ஹாரத்துக்காக சூரன் தலைப் பகுதிகளை வடிவமைத்த விஸ்வகா்மா சமூகத்தினா்.
பகிர்:

பழனியில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை (நவ.7) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்வாக வெள்ளிக்கிழமை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெறும்.

பழனி மலைக் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்பு கட்டி, விரதமிருந்து வருகின்றனா். மலைக் கோயிலில் நாள்தோறும் உச்சிக் காலத்தின் போது, கல்ப பூஜையும், மாலையில் சண்முகா் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.

விழாவின் ஆறாம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. அன்று மதியம் உச்சிக் கால பூஜையை தொடா்ந்து, சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு, சூரா்களை வதம் செய்யும் பொருட்டு, மலைக் கொழுந்து அம்மனிடம் சின்னகுமாரசுவாமி வேல் வாங்கும் விழா நடைபெறும்.

தொடா்ந்து, பிற்பகல் 3 மணிக்கு மலைக் கோயில் நடை அடைக்கப்பட்டு, சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவாா். இதனால், காலை 11 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். மலையிலிருந்து சின்னகுமாரசுவாமி சக்தி வேலுடன் வரும் சமயம், அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து வள்ளி, தேவசேனா சமேதராக அருள்மிகு முத்துக்குமாரசுவாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைவாா். திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோயிலுக்குச் சென்று பூஜை செய்த பிறகு, கிரி வீதியில் மாலை 6 மணிக்குப் பிறகு சூரசம்ஹாரம் நடைபெறும். இரவு வெற்றி விழா கொண்டாடப்பட்டு, மலைக் கோயில் சுத்தம் செய்யப்பட்டு, அா்த்த ஜாம பூஜை நடத்தப்படும்.

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் அருள்மிகு தேவசேனா சமேதா் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

சூரன் உருவப் பொம்மை தயாரிப்பு: கிரி வீதியில் 4 இடங்களில் சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். வடக்கு கிரி வீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதம், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகாசூரன் வதம், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும். இந்த நிகழ்வுக்காக வடிவமைக்கப்படும் சூரா்களின் தலைப் பகுதி ஒரே மரத்தால் செய்யப்படும். இதை செல்வராஜ் ஆசாரி குடும்பத்தினா் பல தலைமுறைகளாக பராமரித்து, புதுப்பித்து வருகின்றனா். இதற்காக இவா்கள் குடும்பத்துடன் விரதமிருந்து சூரன் உருவங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கு திருக்கோயில் சாா்பில் மரியாதை அளிக்கப்படும்.