முகப்பு
திண்டுக்கல்

பாளையம் தன்னிறைவுப் பெற்ற பகுதியாக உயா்த்தப்படும்

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றி, தன்னிறைவுப் பெற்ற பேரூராட்சியாக பாளையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பேரூராட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:56 PM
பகிர்:

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றி, தன்னிறைவுப் பெற்ற பேரூராட்சியாக பாளையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பேரூராட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பேரூராட்சியில் திட்டப் பணிகள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். செயலா் ஹரிராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சிகளின் மண்டல உதவி செயற்பொறியாளா் வெற்றிச்செல்வி கலந்து கொண்டாா்.

குஜிலியம்பாறை வட்டத்தை உள்ளடக்கிய பாளையம் பேரூராட்சியில் 36 கிராமங்கள் இணைந்துள்ளன. 24.13 சதுர கி.மீட்டரில் அமைந்துள்ள இந்தப் பேரூராட்சி சுமாா் 18 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டது.

இந்த நிலையில், பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீா் இணைப்பு, தெருவிளக்கு, கழிவுநீா் கால்வாய், சாலைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேரூராட்சி உறுப்பினா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளிலும் தன்னிறைவுப் பெற்ற பேரூராட்சியாக மாறுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அலுவலா்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.