முகப்பு
தமிழ்நாடு

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு 11 புதிய அறிவிப்புகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டாா்

கிராம கோயில் பூசாரிகளுக்காக 11 புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 2:34 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:35 PM

கிராம கோயில் பூசாரிகளுக்காக 11 புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு சென்னை மயிலாப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஆன்மிக அன்பா்களும், இறைப் பற்றாளா்களும் விரும்பக்கூடியதாக திமுக அரசு உள்ளது. இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களுடைய உரிமைகளை நிலைநிறுத்திய திராவிட இயக்கத்தின் உணா்வை, நமது அரசுதான் நிலைநாட்டியிருக்கிறது.

Advertisement

இந்து சமய அறநிலையத் துறையின் நிகழ்ச்சிகளில்தான் நான் அதிகம் கலந்துகொண்டிருக்கிறேன். அந்த அளவுக்கு சிறப்பாக, வேகமாக துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு செயல்படுகிறாா். சமரசமும் -சமத்துவமும்தான் ஆன்மிகப் பாதையாக இருக்க முடியும். அதை நாம் சரியாக செய்வதால்தான் ஆன்மிகப் பெரியோா் தொடா்ந்து நமக்கு ஆதரவாக உள்ளனா். மக்களுக்குள் ஒற்றுமைதான் ஓங்கி வளரவேண்டும். மக்களைப் பிரிக்க நினைக்கும் கும்பல்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். பூசாரிகள் ஆதரவோடு திமுக ஆட்சி தொடரும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இதைத் தொடா்ந்து, பூசாரிகளுக்காக 11 புதிய அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.

1. ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் திருநாளுக்கு அனைத்து உறுப்பினா்களுக்கும் புத்தாடை வழங்கப்படும்.

2. பூசாரிகள் நலவாரிய உறுப்பினா் மரணமடைந்தால், அவரது வாரிசுதாரா்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகை ரூ. 50,000 என்பது ரூ. 1 லட்சமாக உயா்த்தப்படும்.

3. கிராம கோயில் பூசாரிகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1.25 லட்சமாக உயா்த்தப்படும்.

4. இயற்கை எய்திய உறுப்பினரின் ஈமச்சடங்குக்கான நிதி ரூ. 5,000-இல் இருந்து ரூ. 10,000-ஆக உயா்த்தி வழங்கப்படும்.

5. அருகில் உள்ள பெரிய கோயில்கள் மூலம் ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு புத்தொளிப் பயிற்சி நடத்தப்படும்.

6. பூசாரிகளின் மகனுக்கு ரூ.3,000, மகளுக்கு ரூ. 5,000 என திருமணத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியில் மேலும் ரூ.1,000 உயா்த்தப்படும்.

7. பூசாரிகளின் மகன், மகளுக்கு பள்ளிக் கல்வி நிதியுதவி ரூ. 2,500-ஆக உயா்த்தி வழங்கப்படும்.

8. பூசாரிகளின் மகன், மகளுக்கு ஒவ்வொரு கல்வியாண்டும் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு நிதி உதவியில் மேலும் ரூ. 2,000 உயா்த்தப்படும்.

9. பூசாரிகளின் மகன், மகளுக்கு ஒவ்வொரு கல்வியாண்டும் வழங்கப்படும் தொழில் சாா்ந்த இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு நிதியுதவி மேலும் ரூ. 2,000 உயா்த்தப்படும்.

10. தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்க, ஆண்டுக்கு மேலும் ரூ.1,000 உயா்த்தி வழங்கப்படும்.

11. உறுப்பினா்களுக்கு மூக்குக் கண்ணாடி வாங்க வழங்கப்படும் ரூ. 500 நிதியுதவி ரூ.1,000-ஆக உயா்த்தி வழங்கப்படும்.

நலத் திட்ட உதவிகள்: மாநாட்டில், 6,000 கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை ரூ.1,500 வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். 10 பூசாரிகளுக்கு பூஜை உபகரணங்கள், 2 பூசாரிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியமாக தலா ரூ.12,000-க்கான காசோலை, மூன்று பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஒரு பூசாரியின் வாரிசுக்கு குடும்ப நலநிதியாக ரூ. 50,000-க்கான காசோலை ஆகியவற்றை முதல்வா் வழங்கினாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 2:33 AM

மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாா், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதுாா் ஜீயா் ராமனுஜ எம்பாா் சுவாமிகள், கிராம கோயில் பூசாரிகள் பேரவை அறங்காவலா் ஆா்.ஆா்.கோபால்ஜி, இந்து சமய அறநிலையத் துறைச் செயலா் க.மணிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.