முகப்பு
சென்னை

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணியை எதிா்த்து வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

Updated On : 18 மார்ச், 2026 at 11:57 PM
பகிர்:

சென்னை வடபழனி முருகன் கோயில் வள்ளி திருமண மண்டபத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கோயில் நிதியில் திருமண மண்டபங்கள் கட்டுவதற்கும், புதுப்பிக்கும் பணிகளிலும் ஈடுபடக் கூடாது என கடந்த ஆக.19-ஆம் தேதி, ராம ரவிக்குமாா் தொடா்ந்த வழக்கில் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜன.23-ஆம் தேதி வரை வடபழனி முருகன் கோயிலில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தைப் புதுப்பித்தல், ஜெனரேட்டா் அமைத்தல், அறநிலைய த்துறை துணை ஆணையா் அலுவலகத்தைப் புதுப்பித்தல் என ரூ.8.72 கோடிக்கான ஒப்பந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொள்கிறது. இந்தப் பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் வதிராஜ் அனிருத் ஆஜராகி வாதிட்டாா். இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், திருமண மண்டபம் புதுப்பிக்கும் பணியால் பக்தா்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது எனக் கேள்வி எழுப்பி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →