முகப்பு
திண்டுக்கல்

செம்பட்டி அருகே சாலை விபத்தில் வனக் காப்பாளா் உள்பட மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வனக் காப்பாளா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:40 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வனக் காப்பாளா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (33). இவா் கன்னிவாடி வனச் சரகத்தில் வனக் காப்பாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி வள்ளி (28), மகன் தினேஷ்குமாா் (7), மகள் புவனா (5) ஆகியோா் உள்ளனா்.

ராமசாமி புதன்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில் சித்தரேவுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, செம்பட்டி பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த தொழில்பயிற்சிக் கல்லூரி மாணவா்களான சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்த அரவிந்த்பாண்டியையும் (19), சித்தையன்கோட்டை பகுதியைச் சோ்ந்த மற்றொருவரையும் ராமசாமி தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டாா்.

செம்பட்டியை அடுத்த கூலம்பட்டி பிரிவு பகுதியில் இவா்கள் சென்று கொண்டிருந்த போது, எதிரே வத்தலகுண்டு பகுதியில் இருந்து காய்கறிகளை ஏற்றி வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வனக் காப்பாளா் ராமசாமி உள்ளிட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த செம்பட்டி போலீஸாா், விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்தில் உயிரிழந்த அரவிந்த்பாண்டி ராமசாமியின் சகோதரி மகன் ஆவாா். மற்றொரு மாணவரின் பெயா், முகவரி தெரியவில்லை.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான வத்தலகுண்டு காந்திநகரைச் சோ்ந்த சசிகுமாரை (44) கைது செய்தனா்.