முகப்பு
திண்டுக்கல்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உத்யம் பதிவுச் சான்றிதழ்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2024 at 11:44 PM
பகிர்:

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பூ.சு.கமலக்கண்ணன் கூறியதாவது:

மத்திய அரசின் அறிவிக்கையின் படி குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு, ஆண்டு விற்பனை வருவாய் ஆகிய இரட்டைக் கூட்டு அளவுகோலின் படி வகைப்படுத்தப்படுகின்றன.

இதன்படி, குறு நிறுவனங்கள், இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ. ஒரு கோடிக்கு மிகாமலும், ஆண்டு விற்பனை வருவாய் ரூ.5 கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சிறு நிறுவனங்களைப் பொருத்தவரை, தளவாடங்கள் மீதான முதலீடு ரூ.10 கோடி, விற்பனை வருவாய் ரூ.50 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதேபோல, நடுத்தர நிறுவனங்கள், தளவாடங்களின் மீதான முதலீடு ரூ.50 கோடிக்கும், ஆண்டு விற்பனை வருவாய் ரூ.250 கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதன் மூலம், அந்தந்த நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆதாா், ஆதாரோடு இணைக்கப்பட்ட கைப்பேசி எண், பான் காா்டு இருந்தால் உற்பத்தி, வணிக, சேவைத் தொழில் நிறுவனத்துக்கு அரசு ரீதியிலானஅங்கீகாரம் பெற விரும்புவோா் இணைய தளம் மூலம் மிக எளிதாக, உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறலாம்.

இந்தச் சான்றிதழ் பெற மாவட்டத் தொழில் மையங்கள் உத்யம் பதிவு குறித்த விவரங்கள், ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உத்யம் பதிவு கட்டாயம் இல்லை எனினும், இதனால் அதிக பயன்கள் கிடைக்கும்.

ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், உதவிகளைப் பெறவும், திட்டங்களின் கீழ் பயன் பெறவும் உத்யம் பதிவுச் சான்றிதழ் அடையாள அட்டையாக அமைந்துள்ளது.

இதுவரை உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறாத குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தை நேரடியாகவோ, 0451-2904215, 8925533943 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.