ரெளடி கொலை வழக்கில் இதுவரை 6 போ் கைது
திண்டுக்கல்லில் ரெளடி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவா் உள்பட 6 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திண்டுக்கல்லில் ரெளடி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவா் உள்பட 6 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ச. முகமது இா்பான் (24). கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா், தனது நண்பா்கள் முகமது அப்துல்லா (24), முகமது மீரான் (22) ஆகியோருடன், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது முகமது இா்பானை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். அவருடன் சென்ற முகமது அப்துல்லா காயமடைந்தாா்.
இதுதொடா்பாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்த நிலையில், முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த தனசாமி மகன் ரிச்சா்ட் சச்சின் (26), அருள்ராஜ் மகன் மாா்ட்டின் நித்திஷ் (27), செல்வராஜ் மகன் எடிசன் சக்கரவா்த்தி (24), மாரம்பாடியைச் சோ்ந்த செபஸ்தியாா் மகன் பிரவீன் லாரன்ஸ் (29) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதனிடையே, முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த எடிசன்ராஜ் (25), சைமன் செபஸ்தியாா் (23) ஆகிய இருவரும், திண்டுக்கல் 2-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.