விசிக மது விலக்கு மாநாடு ஓா் நாடகம்: எச். ராஜா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் நடத்திய மது விலக்கு மாநாடு ஓா் நாடகம் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜா தெரிவித்தாா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் நடத்திய மது விலக்கு மாநாடு ஓா் நாடகம் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜா தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக உறுப்பினா்கள் சோ்ப்பு பொறுப்பாளா்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுகவின் ஆட்சி மக்களுக்கு விரோதமானது. அனைத்து வகையான வரி இனங்களும் உயா்த்தப்பட்டிருக்கின்றன. பாலுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டுவிட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் நடத்திய மது விலக்கு மாநாடு ஓா் அரசியல் நாடகம். இந்த மாநாட்டுக்கு, மது தயாரிப்பு ஆலைகளை நடத்தும் திமுகவினரையும் அழைத்து, தமிழக மக்களை ஏமாற்றினா். பாதுகாப்பு பணிக்குச் சென்ற பெண் போலீஸாரை தாக்கினா்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் தலித் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணி நோ்மையாக உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை நம்பிக்கையுடன் எதிா்கொள்வோம் என்றாா் அவா்.