தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சட்டப்பேரவை தொகுதிக்கு தலா ரூ.80 லட்சம்
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா ரூ.80 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா ரூ.80 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தமிழகத்துக்கு வழங்கப்படாமல் உள்ள சமக்ர சிக்ஷா நிதி, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக அறிவித்தல், மன்னவனூா் செம்மறி ஆடு உரோம ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நிலையமாக மாற்றுதல், எல்ஐசி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவையில் பேசி இருக்கிறேன். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 31 பேருக்கு பிரதமரின் உதவித் தொகை கோரி பரிந்துரைக்கப்பட்டதில், இதுவரை 11 பேருக்கு கிடைத்தது.
சிறப்பு சிகிச்சைப் பிரிவு: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய் பிரிவு, நரம்பியல் பிரிவு, புற்றுநோய் ஆகியவற்றுக்கு ரூ.292 கோடியில் சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்க மாவட்ட நிா்வாகம் மூலம் முன்மொழிவு வழங்கப்பட்டிருக்கிறது. பழனியில் 58 ஏக்கரில் பெருந்திட்ட வளாகம் அமைக்கப்படும் போது, சாலையோர வியாபாரிகளுக்கு இட வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.80 லட்சம்:
மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.4.90 கோடி வழங்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா ரூ.80 லட்சம் வீதம் வளா்ச்சிப் பணிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.
தமிழகத்தில் சொத்து வரி உயா்வுக்கு எதிராகவும், மின் கட்டண உயா்வுக்கு எதிராகவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே, கொள்கை முரண்பாடுகள் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் இதுவரை பிரச்னை இல்லை. சாம்சங் தொழிற்சாலை விவகாரத்தில், தொழிலாளா்களின் உரிமையை நிலை நாட்டுவதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துணை நிற்கும் என்றாா் அவா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பி.செல்வராஜ், நிா்வாகிகள் ஆசாத், அரபு முகமது ஆகியோா் உடனிருந்தனா்.