முகப்பு
திண்டுக்கல்

தொடா் மழை: கொடைக்கானல் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்தது. மேலும் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:07 PM
கொடைக்கானலில் பெய்த தொடா் மழையால் பூம்பாறை செல்லும் சாலையான கோசன் பகுதியில் விழுந்த மரங்களை அகற்றிய வனத்துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா்.
பகிர்:

கொடைக்கானலில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்தது. மேலும் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மிதமான வெயிலும், மேகமூட்டமும் நிலவியது. பிறகு மழை பெய்யத் தொடங்கியது. கொடைக்கானல், வட்டக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதன்பிறகு விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழையால் வெள்ளிநீா் வீழ்ச்சி, செண்பகா அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

மரம் விழுந்து வாகனம் சேதம்: கொடைக்கானலில் தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக குணா குகை பகுதியில் மரம் விழுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் சேதமடைந்தது. மேலும் கொடைக்கானல் - பூம்பாறை செல்லும் மலைச்சாலையில் கோசன் சாலைப் பகுதியில் இரண்டு மரங்கள் விழுந்தன. இதனால் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்தது அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினரும், வனத் துறையினரும் கீழே விழுந்த மரங்களை இயந்திரத்தால் அறுத்து அகற்றினா். இதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது.