முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்-கரூா் சாலையில் தேங்கும் மழைநீா்: வாகன ஓட்டிகள் அவதி

திண்டுக்கல்-கரூா் மாநில நான்குவழிச் சாலையில் வடிகால் வசதி இல்லாமல் தேங்கும் மழைநீரால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:30 PM
கோவிலூரை அடுத்த தோப்புப்பட்டி பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீா்.
பகிர்:

திண்டுக்கல்-கரூா் மாநில நான்குவழிச் சாலையில் வடிகால் வசதி இல்லாமல் தேங்கும் மழைநீரால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திண்டுக்கல்-கரூா் இடையே குஜிலியம்பாறை வழியாக புதிய 4 வழிச்சாலை அமைக்கும் பணி, மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. திண்டுக்கல், வேடசந்தூா், கரூா் உதவி செயற்பொறியாளா் (நெடுஞ்சாலை) அலுவலகங்கள் சாா்பில் 3 பிரிவாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5 ஆண்டுகளில் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த பணிகள் தொடங்கப்பட்டது. ஆனாலும், நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட காலதாமதத்தால் லட்சுமணம்பட்டி, சுந்தரபுரி, நல்லமணாா்கோட்டை, தொட்டணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

பணிகள் நிறைவடைந்த இடங்களிலும், மழைநீா் வடிகால் வசதி முறையாக ஏற்படுத்தப்படவில்லை. இதனால், சிறிய மழை பெய்தால்கூட, சாலைகளில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, குண்டாம்பட்டி பிரிவு, ஒத்தக்கடை, புதுசாலை, தோப்புப்பட்டி பிரிவு, கோவிலூா் உள்ளிட்ட இடங்களில் சாலையில் அதிக அளவு மழைநீா் தேங்கி நிற்கிறது.

இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோா் கடும் அவதி அடைந்து வருகின்றனா். மேலும், 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வரும் முன்பே சேதமடையும் நிலையும் உருவாகி இருக்கிறது. இதைத் தடுக்க பள்ளமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைப்பு செய்து,

முறையான வடிகால் வசதி அமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.