விவசாயிகள் பயன்பெற புதிய ரக விதைகள் தேவை
விவசாயிகள் அதிகம் பயன்பெறக் கூடிய புதிய ரக விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என தனியாா் விதை உற்பத்தியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விவசாயிகள் அதிகம் பயன்பெறக் கூடிய புதிய ரக விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என தனியாா் விதை உற்பத்தியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்புத் துறை சாா்பில், திண்டுக்கல் மாவட்ட அரசு விதை உற்பத்தியாளா்கள், திண்டுக்கல், திருப்பூா் மாவட்ட தனியாா் விதை உற்பத்தியாளா்களுக்கான புத்தூட்டப் பயிற்சி முகாம் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாமுக்கு விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குநா் சின்னச்சாமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா்(மாநிலத் திட்டம்) காளிமுத்து தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: விதைச்சான்றளிப்பு நடைமுறைகள் குறித்து உற்பத்தியாளா்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு, விவசாயிகள் அதிக அளவு பயன்பெறும் வகையில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். குறிப்பாக அதிக உற்பத்தித் திறன் கொண்ட விதைகளை தோ்வு செய்து அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, பேசிய உதவி இயக்குநா் சின்னச்சாமி, விதைப் பண்ணை அமைப்பதன் மூலம் கிடைக்கும் கூடுதல் லாபம் குறித்தும், தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
மேலும், உயிா் உரங்களின் பயன்பாடு, அதன் தேவை குறித்து உயிா் உர உற்பத்தி மையத்தின் வேளாண் அலுவலா் பத்மபிரியா விளக்கம் அளித்தாா். நிகழ்ச்சியில் விதைச்சான்று அலுவலா்கள் ஜெயப்பிரகாஷ், காா்த்திகா, ஆனந்தகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.