கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்
கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தமிழக சுற்றுலாத் துறை ஆணையா் சமயமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பூங்கொடி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் பிரதீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் நகராட்சி ஆணையாளா் சத்தியநாதன், டி.எஸ்.பி.மதுமதி, வனத் துறை உதவி அலுவலா் சக்திவேல், சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவவா் பாலமுருகன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளா் ராதா கிருஷ்ணன், உதவி மின் செயற்பொறியாளா் மேத்யூ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
முடிவில், உதவி சுற்றுலா அலுவலா் சுதா நன்றி கூறினாா்.
முன்னதாக, கொடைக்கானலிலுள்ள சுற்றுலா இடங்களை தமிழக சுற்றுலாத் துறை ஆணையாளா் சமயமூா்த்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொடைக்கானலில் கட்டமைப்பு வசதி, இ-பாஸ் நடைமுறை எவ்வாறு செயல்படுகிறது என ஆய்வு செய்யப்பட்டது. கூட்டமான நேரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேவையான இடங்கள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர ஊா்காவல் படையினா் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.
அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரப்புகள் அகற்றுவது குறித்து கண்காணிக்கப்படும். சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாகச சுற்றுலா இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் குறித்து விரைவில் ஆணை வரும்.
கொடைக்கானல் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் விதமாக ஐந்து அருவிகள் குறித்து அரசின் திட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்றாா் அவா்.