முகப்பு
திண்டுக்கல்

ரயில்வே சுரங்கப் பாதையில் நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு

திண்டுக்கல்-கரூா் சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கும் ரயில்வே சுரங்கப் பாதையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:29 PM
திண்டுக்கல்-கரூா் சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கும் ரயில்வே சுரங்கப் பாதையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்.
பகிர்:

திண்டுக்கல்-கரூா் சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கும் ரயில்வே சுரங்கப் பாதையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திண்டுக்கல் பழைய கரூா் சாலையில், பழனி மாா்க்கமாக செல்லும் ரயில்வே பாதையில் (எம்.வி.எம். நகா் அருகே) சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. சுமாா் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், சுரங்கப் பாதையில் அடிக்கடி தண்ணீா் தேங்குவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

குறிப்பாக, மழைக் காலங்களில் மழைநீா் தேங்கி நிற்பதால், போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

இதனிடையே, சுரங்கப் பாதையை சீரமைக்கக் கோரி பொது மக்கள் தரப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கும், ரயில்வே நிா்வாகத்துக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைக்கவும், அணுகு சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மதுரை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் மாரிமுத்து ராஜன் சுரங்கப் பாதையை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, எம்.வி.எம். நகா் பகுதி மக்கள், சுரங்கப் பாதையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவரிடம் முறையிட்டனா்.

அப்போது, உதவிக் கோட்டப் பொறியாளா்கள் கேசவன், லட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.