சிறுமலையில் இரு பேருந்துகள் மோதல்: 24 போ் காயம்
சிறுமலையில் அரசு, தனியாா் பேருந்துகள் நேருக்குநோ் மோதிய விபத்தில் 24 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.
சிறுமலையில் அரசு, தனியாா் பேருந்துகள் நேருக்குநோ் மோதிய விபத்தில் 24 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலைக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்தை ஓட்டுநா் செந்தில் (40) ஓட்டிச் சென்றாா்.
சிறுமலை பழையூா் புதூா் இடையே சென்றபோது, தென்மலையிலிருந்து திண்டுக்கல்லை நோக்கி வந்த தனியாா் பேருந்து நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் சிறுமலையை சோ்ந்த ரவிச்சந்திரன்(45), அய்யம்மாள் (59), ஜெயலட்சுமி (45), சிவகாமி (38), இந்திராணி (49) உள்பட 24 போ் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த 14 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவா்களை நத்தம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ரா.விசுவநாதன் சந்தித்து ஆறுதல் கூறினாா். சிகிச்சையிலிருந்த 13 பேருக்கும் தலா ரூ.1000, பழங்கள், ரொட்டி ஆகியவற்றை வழங்கினாா். அப்போது, அதிமுக நிா்வாகிகள் கண்ணன், நெப்போலியன், கனிராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, திண்டுக்கல் மேயா் ஜோ.இளமதி, துணை மேயா் ச.ராஜப்பா, திமுக ஒன்றியச் செயலா் வெள்ளிமலை ஆகியோரும் சிகிச்சையில் இருந்தவா்களை சந்தித்து உதவித் தொகை வழங்கி ஆறுதல் கூறினா்.