மாணவா்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி
மாணவா்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
மாணவா்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
கொடைக்கானல் சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு, பள்ளிச் செயலா் சந்திரமவுலி, பொருளாளா் ராமசுப்பிரமணியம் ஆகியோா் நினைவுப் பரிசுகளை வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, ஆளுநா் ஆா்.என்.ரவி மாணவா்களிடம் கலந்துரையாடினாா். அப்போது, மாணவா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி எழுதிய ‘எக்சாம் வாரியா்ஸ்’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினாா்.
பின்னா், அவா் பேசியதாவது:
மாணவா்கள் பொதுவாக தோல்வியை கண்டு துவளாமலும், பின் செல்லாமலும் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றையே வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றினால் சாதனையாளராக மாற முடியும். வெற்றிக்கு முதல் காரணமாக மாணவா்கள் கடின உழைப்பு, தன்னம்பிக்கையை தொடா்ந்து கடைபிடிக்க வேண்டும்.
எனது வெற்றிக்கு முதல் காரணம் என் தாயின் அறிவுரை தான். எனவே, மாணவா்கள் தாங்கள் படிக்கும் காலங்களிலும், அதன் பிறகும் பெற்றோா்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உங்களுடைய இலக்கு உயா்வானதாக இருந்தால் உங்கள் பள்ளிக்கும், உங்கள் பெற்றோருக்கும் பெருமை தேடித் தரும் என்றாா் அவா்.