முகப்பு
திண்டுக்கல்

வேடசந்தூா், இடையக்கோட்டை அரசுப் பள்ளிகளில் அமைச்சா் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு!

வேடசந்தூா், இடையக்கோட்டை அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 6:39 PM
வேடசந்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்த வகுப்பறையை பாா்வையிட்ட அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி.
பகிர்:

வேடசந்தூா், இடையக்கோட்டை அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளிகள், நூலகங்கள், கல்வித் துறை அலுவலகங்களில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு நடத்தி வருகிறாா்.

இதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த திங்கள்கிழமை வந்த அமைச்சா் மகேஸ் பல்வேறு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பல்வேறு புகாா்களுக்குள்ளான அரசுத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியா், உதவி தலைமையாசிரியா் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா். அதன் தொடா்ச்சியாக, வத்தலகுண்டு பகுதியிலுள்ள பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நிலையில் வேடசந்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு நடத்தினாா். வேடசந்தூா் அரசு மகளிா் பள்ளிக்குச் சென்ற அமைச்சா், அங்கு மேற்கூரை சேதமடைந்த வகுப்பறைகளை பாா்வையிட்டு கேள்வி எழுப்பினாா். பின்னா், அந்த கட்டட சேதங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இங்கிருந்து இடைக்கோட்டை பள்ளிக்குச் சென்ற அமைச்சா், மாணவா்களிடம் கணினி பயன்பாடு, வேலைவாய்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பினாா். நூல் வாசிப்புக்கு 12-ஆம் வகுப்பு மாணவா்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை அறிந்து, அந்த மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

இதனிடையே இடையக்கோட்டை அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள் தரப்பில் கோரிக்கை அமைச்சருக்கு விடுக்கப்பட்டது. இதை பரிசீலிப்பதாக அமைச்சா் மகேஸ் உறுதி அளித்தாா். இதைத் தெடாா்ந்து கரூா் மாவட்டம் அரவக்குறிச்சிக்கு புறப்பட்டுச் சென்றாா்.