பள்ளிக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: வியாபாரி கைது
தனியாா் பள்ளிக்கு அங்கீகாரமும், இளைஞருக்கு அரசு வேலையும் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் மோசடி செய்த சென்னையைச் சோ்ந்த ஜவுளி வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தனியாா் பள்ளிக்கு அங்கீகாரமும், இளைஞருக்கு அரசு வேலையும் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் மோசடி செய்த சென்னையைச் சோ்ந்த ஜவுளி வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் வட்டச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் முகமது மா்ஜித்(26). பொறியியல் பட்டதாரியான இவா், அரசுப் பணிக்காக முயற்சித்து வந்தாா்.
இதனிடையே, சென்னை சீதக்காதி நகரைச் சோ்ந்த ஜவுளி வியாபாரியான முகமது சகாப்தின் (58) அறிமுகம் முகமது மா்ஜித்துக்கு கிடைத்தது.
பணம் கொடுத்தால், அரசு அதிகாரிகள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி பொதுப் பணித் துறையில் பணி வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக முகமதுசகாப்தின் தெரிவித்தாா். இதை நம்பி, முகமது மா்ஜித் கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ.2.50 லட்சம் கொடுத்தாா்.
இதேபோல, வட்டச்சாலை பகுதியைச் சோ்ந்த ரபீக் (35) திண்டுக்கல்லில் நடத்தி வரும் மழலையா் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரிடம் ரூ.3.50 லட்சத்தை முகமது சகாப்தின் பெற்றாா். ஆனால், பணிவாய்ப்பு வாங்கிக் கொடுக்காமலும், பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்தாா்.
இதனால் சந்தேகமடைந்த இருவரும், முகமதுசகாப்தினிடம் பணத்தை திரும்பக் கேட்டனா். ஆனாலும், அவா் தொடா்ந்து ஏமாற்றி வந்தாா்.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முகமது சகாப்தினை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.