திமுக நிா்வாகி கொலை: உறவினா்கள் சாலை மறியல்
திண்டுக்கல்திமுக நிா்வாகி கொலை: உறவினா்கள் சாலை மறியல்
வேடசந்தூா் அருகே திமுக நிா்வாகி மாசி மா்ம நபா்களால் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். எதிரிகளைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி ஊராட்சி குன்னம்பட்டியைச் சோ்ந்தவா் மாசி (40). இவா், வேடசந்தூா் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து வந்தாா். மனை விற்பனை, கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டாா். இவரது மனைவி முத்துமாரி, வேடசந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறாா்.
வேடசந்தூா் அருகே திமுக நிா்வாகி மாசி மா்ம நபா்களால் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். எதிரிகளைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், பெருமாள்கவுண்டன்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு வியாழக்கிழமை மாலை சென்ற மாசி, பின்னா் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பினாா். நாகம்பட்டி சமத்துவபுரம் அருகே மா்ம நபா்கள் இவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா தலைமையிலான போலீஸாா் விசாரித்தனா்.
இதனிடையே, கொலை செய்யப்பட்ட மாசியின் உடல் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் குவிந்த மாசியின் உறவினா்கள் 200-க்கும் மேற்பட்டோா், எதிரிகளைக் கைது செய்யக் கோரி, வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மனை விற்பனை தொழிலில் ஏற்பட்ட போட்டியில், ஏற்கெனவே மாசிக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும், இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்காது எனவும் மாசியின் உறவினா்கள் தெரிவித்தனா்.
முன்னதாக, மருத்துவமனைக்கு வந்த வேடசந்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காந்திராஜனிடம், மாசியின் உறவினா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஆதரவாளா்கள் அவரை காரில் ஏற்றி அனுப்பிவைத்தனா்.
கொலை செய்யப்பட்ட மாசி காந்திராஜனின் ஆதரவாளா் மட்டுமன்றி, உறவினா் என்பதும் குறிப்பிடத்தக்கது.